Wednesday, 26 October 2016

"தீபாவளி வந்துடுச்சு"

தீபாவளி வந்துடுச்சு !


Image result for deepavali cartoon images




தீபாவளி வந்துடுச்சு 
தெருவெல்லாம் சரவெடி !

விடிகாலை எழுந்திரிச்சு 
வெடி வெடிப்போம் வாங்கடி !

எண்ணெய் வெச்சு குளிச்சாச்சு 
புதுச்சொக்காய் போடணும் !

பூப்போட்ட பாவாடை 
சுத்திச்சுத்தி  ஆடணும் !

பாப்பா, நீ பயப்படாதே 
அக்கா என் கைபுடி ,

அண்ணங்காரன் வைக்கப்போறான் 
அதிரவைக்கும் யானை வெடி !      

ராக்கெட்டு போவுது பார் 
சீறிக்கிட்டு வானிலே !

பாம்பு வெடி பாஞ்சு வரும் 
பாத்துப்போடி ரோட்டிலே !

புஸ்வாணம் மத்தாப்பு 
சங்குசக்கர வாணமும் ,

கேப்புவெடி பட்டாசும் 
நாள்பூரா வெடிக்கணும் !

அம்மா செஞ்ச கைமுறுக்கு 
கம கமன்னு மணக்குது !

அத்தை தந்த அல்வாவும் 
சப்புக்கொட்ட வைக்குது !

அடுத்த வீட்டு தேன்குழலும் 
அதிரசமும் வருகுது !

நம்ம வீட்டு மைசூர்பாகு 
தெரு முழுக்க சுவைக்குது !

பலகாரம் பல இனிப்பு 
சேர்ந்து நாம உண்ணலாம் !

தினந்தினமும் தீபாவளி 
வந்துபோனா தேவலாம் !










  

Monday, 15 August 2016

"ஜனநாயகம்" " Jananaayagam"






ஜனநாயகம் !


பட்டினிப்போர் பல கண்டோம் 

அறப்போரால் உரம் கொண்டோம் 

அடங்காமல் அடக்கி வென்றோம் 

பாரதத்தின் மாண்பு அது - ஜனநாயகம் !


எண்ணடங்கா உயிர்த்தியாகம் 

உணர்வுகளால் செய்த யாகம் 

நாங்கள் கொண்ட தேசநேசம் 

ஆதிக்கத்தின் அழிவு அது - ஜனநாயகம் !


செக்கிழுத்தார் கல்லுடைத்தார் - தினம் 

அடிபட்டார் புண்ணுற்றார் - மனம் 

வளர்த்தெடுத்த சுதந்திரத்தீயின் - சினம் 

தாங்காது அந்நியன் தகித்தான் - ஜனநாயகம் !


பெற்ற உரிமை போற்றப்படும் - என்றும் 

நாட்டின் நன்மை பேணப்படும் - பாரதம் 

உலகின் முதலாய் நிலைநாட்டப்படும் - அஞ்சோம் 

இளைஞர் நாங்கள், காப்போம் - ஜனநாயகம் !


கடலின் அழுக்கு சுவையாகும் 

வானின் அழுக்கு மழையாகும் 

மனிதன் அழுக்கு குணமாகும் 

நம்பிக்கையே நாளைய வெளிச்சம் - ஜனநாயகம் !





Monday, 11 July 2016

"காலம்" " Kaalam"

காலம் !


காலம் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது !

என்னோடு எப்போதும் பயணிக்கும் நண்பன் இது ;

நான்  மந்தித்து தங்கி விடும் தருணங்களில், 

இதன் பொதுத்தன்மை கேள்விக்குறியாகி விடும் !

எப்போதும் ஏன் என்னுடன் சஞ்சரித்துக்கொண்டு ,

நிலையாமல் நிலைக்கும் மாமுனி - என் நிலையாமை ?

கிரகங்களின் சுற்றல்தான் நீயா எனில் எப்படித் தங்கினாய் ?

பல வெளிகளுக்கப்பால் நீண்டு கிடக்கிறது இவன் தோற்றம் !

கருவறையில் அவன் இருப்பதுபோல இவன் என்னோடு !

அவன் அங்கு மட்டும்தான் என்றால் தங்குதலின்  பொருள் ?

ஞாலத்தின் விரைதலில் காணக்கிடைப்பானா - முயன்று பாரேன் !

அஸ்தமனத்தின் புலரல் இவனால் என்று காரணித்து - விடு ,

உன் மூத்த கணங்களில் நிறுத்த முயல்வாய் சுயநலமாய்.

பெண்பாலாய் அவன் காண விருப்பம் - நானோ , அவனோ ?

பரந்து  கிடக்கும் அவள் உன் மேல் படிய நீ உணர்வாயா ?

காத்திருக்கிறேன் அவளோடு ஒடுங்கி நிகழ்ந்து 'காலமாக' !

என் மேலும் படிவாள் நீள் நிலையின் உண்மையாய் அன்று !

காற்றும் மோனமும் முயன்று கொண்டே இருக்கிறது , முடியாமல் ;

கணிக்க முடியா வேகமும் நிற்றல்தானே - காலம், காலமாக !

என்னுள் வியாபிக்கிறாள் நிலையாக , இறந்த காலம் !



















Monday, 16 May 2016

தேர்தல் திருவிழா - "Therthal Thiruvizha"

தேர்தல் திருவிழா !




ஆம் ! இருக்கிறது, எண்ணற்ற கோட்பாடுகள்,

முரண்பட்ட கருத்துக்கள், அளவில்லா கட்சிகள் !


ஆர்ப்பரிக்கும் பிரச்சாரங்கள் ; வகையான வாக்குறுதிகள் ;

'தேர்தல் திருவிழா' என்னும் அர்த்தமிகு புரிந்துகொள்ளல் !


எத்தனை தியாகங்கள் செய்து பெறப்பட்ட வரம் இது !

எம்மக்கள் அறிவர் , எம் தலைவர்களும் அறிவர் !


எதில்தான் இல்லை குறை ? குறைவாய் இருப்பது "குறை",

நிறைந்திருத்தல் " நிறை" , இதை உணர்தலே முறை !


இருக்கட்டும், அங்கங்கே சில கொள்கை மோதல்கள் ;

மோதல்கள் ஜனநாயகக் காதல்களாகட்டும், கைகுலுக்கலுடன்!


இந்தத்திருவிழா கணினிக்காலத்திலும் கண்ணியமாகவே உள்ளது.

எங்காவது உண்டா இப்பாரம்பரியம் இம்மண்ணைத்தவிர ?


வாக்காளர் வரிசைகள் சொல்லவில்லை - உரிமையின் நிலைநாட்டலை,

எம் நாடு மேன்மையுறும் என்ற எங்களின் நம்பிக்கையை ?


எல்லாக்கட்சியிலும் உள்ளனர் நம் சகோதர சகோதரியர்

தவறில்லை, இந்த இந்தியக்குடும்பம் மகத்தானது !


நம் விரல்கள் 'மை' யினால் மட்டுமே கறைபடட்டும் ;

நம் உணர்வுகள் மேன்மையால் பண்படட்டும் !









Sunday, 8 May 2016

பிரவாகம் -- "pravaagam"



பிரவாகம் 


மந்தித்துப் போனேன் மந்தகாசத்துடன் 

மதியிழந்த இறுமாப்பு - போகட்டும் ,


எத்திக்கும் சென்று எக்காளமிடட்டும் 

முக்காலம் வரைந்த புதுமைப்பிம்பம் - நானாக !


சென்றழைக்கும் காலமும் வந்திழுக்கும் நினைவும் 

கோலமா என்று எனக்குள் சிரித்து நழுவும்போது 


வந்திருக்கும்போது பார்த்து மகிழ்ந்து கொள்ளை கொள் 

வாராதிருக்கும் வசதி நிலையெனத் தழுவித்தழுவி 


ஏனின்று நானானேன் , உணர்ந்து வியாபித்தேன் - இங்கு ?

நான் வரும்போது என் கூடாநிலை எக்காலத்திலும் !


புரியாமல் பிரிந்து நின்று பிரிந்தபின் புரிந்த ஞாலம் 

மலர்ந்து விழித்த பூவாய் வாடி நின்ற நானாக , நீயாக !


இமயத்தின் ஆழத்தில் இயங்காமல் இருத்தியபோழுது 

கோடிப் பிரகாசத்தின் துணை கொண்டு - தைரியமா ?


ஓடாத காட்டாற்றின் அமைதியான வறட்சி - தாங்குமா ,

சலசல தூறல் ஆரம்பித்து மெதுவான ஓட்டம் 


கொட்டெனக் கொட்டும் ஆகா , நதியென்றால் என்ன ?

சுழித்து ஓடும் நீரா , அது பிரவாகிக்கும் பாதையா ?






Friday, 4 March 2016

ஒரே ஏகாந்தம் ! "oRe Ekaantham" !

 ஏகாந்தம் 


ஒரே ஏகாந்தம் !

என்  மடியில் என்னைக் கிடத்திப் பார்த்தது !

என் மறைந்து ஞான மண்டலத்திற்குள் 

ஆகாசம் உட்புதைந்த அமரம் 

எண்ணப் புதையல்கள் இருளற்று 

பேரொளிச் சிதறல் ஒன்றாய் ஏதுமற்று 

கானகத்தில் எத்தனை எத்தனை கானம் - அகம் ?

தர்க்கமும் தாகமும் தவிக்கும் மோகமும் 

இடைவிடாதலால் இயக்கமின்றிப்போய் 

கொதித்துக் களைத்து ஆறுதலில்லை ,

பனித்து உருகி கரைதல் ஆறுதல் - இல்லை ?

பேராட்டம் அகண்டு நீங்கி நிறைந்தது 

தோற்றத்தின் மையம் மிக அருகில் யாதுமற்று !

நிறைதலும் அற்றுப் போதலும் பலதாய் ஒன்றி 

பார்வை திரண்டு புலரும் நோக்கமின்றி நோக்கின் !

உருத்தெரியாமல் நிகழ்ந்து விட்ட பேருரு !

ஒரே ஏகாந்தம் ! தொடருமா ? முடிவா ?





Tuesday, 12 January 2016

"SIVAM" சிவம் !


சிவம் !



உமை ஒரு பாகன்  - சிவன் 

உவமை இல்லாதொரு பாகன் 


முக்காலம் செய்விக்கும் காலன் 

காலனையும் உய்விக்கும் காவலன் 


கங்கையை திருமுடியில் ஏற்றவன் 

முடிவில்லா பிரபஞ்சத்தின் கொற்றவன் 


கண் மூடி தியானித்தால் கருணாமூர்த்தி 

முக்கண்ணின் தத்துவத்தால் ருத்ரமூர்த்தி 


சிற்றம்பலத்தில் ஆனந்ததாண்டவ நடராசன் 

பேரம்பலம் ஆளும் ஊர்த்வதாண்டவ ஈசன் 


பஞ்சபூத தலங்களின் அதிபதி 

பஞ்சங்கள் போக்கிடும் சபாபதி 


ஐங்கரனுக்கும் ஆறுமுகனுக்கும் தந்தையானவன் 

ஏழுலகைப் படைத்ததனால் தாயுமானவன் 


வைத்யநாதன் வன்மீகநாதன் காசிநாதன் 

'நா'தனில் அழைத்தால் நாதியாய் வரும் சொக்கநாதன் 


நம்மையே நமக்குணர்த்தும் நமச்சிவாயம் !

பேரானந்தம் எடுத்துரைக்கும் நமச்சிவாயம் !

திருக்கயிலை வாழ்வளிக்கும் நமச்சிவாயம் ! 



SIDHESHWARA TEMPLE, NAMCHI, SIKKIM.