Thursday, 14 March 2019

"என்" பிள்ளைத்தமிழ் !



"என்" பிள்ளைத்தமிழ் ! 


திடீரென்று அது நடந்தது - இதோ இப்போதுதான் !

பத்து வயது குழந்தையாக மாறிப்போனேன் !


கிராமத்து வீட்டு முற்றத்தில் குதித்து ஓடினேன்,

வாசலுக்கும் கொல்லைக்கும் ஆனந்தமானேன்!


லேசாக எழும்பி கிணற்றுள் பார்த்தேன் - ஏய் !

என்ன அம்மாவின் அதட்டலைக் காணோம் ?


தட்டான்கள் சுற்றிவந்து சங்கீதமிட்டன,

எங்கே போனாய் நீ, வா மாமரம் சுற்றுவோம் !


"எங்கே நம் கூட்டாளிகள் ? தோழிகள் எங்கே ? " - தேடினேன் !

தோட்டத்துக் கால்வாய் காய்ந்தது , "என்னைக் கேட்டால் ?"


அட ! என் வண்ணத்துப்பூச்சி வந்துவிட்டது -

" இது என்ன கோலம்? " - சிரித்து சிறகடித்தது !


"தொலைந்ததை மீட்க வந்தாயா ?" - தேன் குடித்தது ,

"தொலைந்தது நீங்கள் அல்லவா ? பிறகென்ன ?"


"குழந்தைகள் எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை,

நீ குழந்தையானாய், சரி ! உன் மகன் எங்கே?


நாங்களும் தொலைந்துதான் பிறக்கிறோம்,

வண்ணங்களை விடுவதில்லையே?" படபடத்தது !


"உன்னொத்தவர்கள் சாதிக்கச் செல்கிறீர்களே ?

எங்கள் கீதம் வருடலின்றி , அது என்ன வேகம் ? வறண்டு !


நீ படித்த கூடம், நடந்த வரப்பு, வளர்ந்த வீடு,

மகிழ்ந்த நண்பர்கள் எல்லாம் நானே ! நான் மட்டுமே !


உன் சுகந்தங்கள் ஏமாற்றாமல் அளிக்கிறேன் - வா !"

எண்ணற்ற வண்ணத்துப் பூச்சிகள் என் மேலமர்ந்து !


ஆகா ! என் மழலையின் சுகம் நிகழ்ந்து மலர்ந்தது,

நாங்கள் பல பூக்களுக்கு பறந்து தாகம் தணிந்தோம் !


என் மாட்சிமை, கனம், வேகம் - குழந்தை தாங்குமா ?

" என்ன இது குழந்தை மாதிரி ? " - என்றாள் இவள் !


நான் அழுது கொண்டிருந்தேன் - நிற்காமல்,

தொலைந்த குழந்தைகள் அனைத்தும் நானாய் !