Tuesday, 8 December 2015

நன்றி வருணா ! சென்னை டிசம்பர் 2015 !

நன்றி வருணா !

நன்றி வருணா !

எங்கள் சோதனைக்காலங்களில் நீ உடனிருந்தாய் !

உன் தாண்டவத்தின் விளைவில்லை இவை  - 

நாங்கள் பல காலமாய் ஆடிய தாண்டவங்களின் விளைவு .


உன் கருணை எங்களைச் சூழ்ந்திருந்தது 

சில வாரங்களாய் , திகட்டத்திகட்ட !

பெய்யெனப் பெய்தாய் - உன்னில் தவறில்லை ,

பொய்யர்கள் நாங்களே , நீ பொய்க்கவில்லை ! 


காணாத காட்சிகள் பல கண்ட போதிலும் 

நினையாத வாழ்வின் நிதர்சனங்களிலும் - எங்கள் 

வீட்டு  மொட்டை மாடியில் நாங்கள் 

அகதிகளான வேளையிலும் உன் துணையிருந்தது வருணா !


நீரில் மிதந்த சிற்றுந்துகளும் , பேருந்துகளும் 

சாலையில் ஓடிய மரக்கலங்களும் சாட்டையாலடித்தன ,

ஆற்றில் நீரோடுவது எங்களுக்கு ஆச்சரியமல்ல - வருணா 

விம்மிப்பரந்து நன்னீர் ஓடியதை சந்ததிகள் மறக்காது ! 


வெகு நாட்களுக்குப் பிறகு அண்டை வீட்டாருடன் 

கை குலுக்கிக்கொண்டோம் , இடுப்பளவு நீரில் !

இணைய வலை அறுந்து , நாங்கள் இணைந்தோம் நேரில்!

தொடர்பு எல்லைக்கு உள்ளே புதிய நட்புகள் .


எங்கோ மறைந்து போயிருந்த மனிதம் - வருணா !

உன் பலமான நீர் தெளிப்பில் விழித்துக் கொண்டது .

ஆகா ! எம் மனிதர் , எம் மக்கள் என்று 

நீண்ட கரங்கள் கண்டு வெள்ளம் தலை குனிந்தது .


மின்சாரம் வந்து நாங்கள் ஓட ஆரம்பிக்கலாம் ;

குழந்தைகள் போட்டியில் தங்களைத் தொலைக்கலாம் ;

சில வாரம் எங்களை நிறுத்தி வைத்தாய் - வருணா !

நாங்கள் யாரென்று உணர்த்தி வைத்தாய் !


உன் உதவி மகத்தானது - வருணா ,

ஆனால் நாங்கள் நன்றி கெட்டவர்கள்தான் .

அடுத்த முறையும் நாங்கள் உன்னை அழைப்போம் !

கருணையோடு வா ! மிதமாக அன்பு செய்து போ !




No comments:

Post a Comment