அஸ்தமனம் உதயம்!
அஸ்தமிக்கும்போதும் உதிக்கும்
இப்போது உச்சியில் உதிக்கிறது
மறைதலும் ஒரு உதித்தல் தானே - அப்போது ?
உச்சம் ஏறும்போது குளிரும்
நடுங்காத அழகான குளிர் காணும்
பாதி தாண்டிய மிதப்பான அமைதி - இப்போது ?
மறையும் திசை தெரிகிறதா ? பயமா?
உதயத்தின் உதயம் அறிவோம் அன்றோ -
அது குழந்தையின் பாதம் - செக்கச்சிவந்து!
பயணித்து மேலேறி நானா - பொய் !
சுற்றலில் இடமாற்றுப்பிழை - மெய் !
பிழை மாற்றும் இடமா - அஸ்தமனம் ?
திடமான அந்திமச்சிரிப்பு - குழந்தை கெட்டது !
கடைசி பாதம் - அதற்குள் மேற்கா ?
நகரவே இல்லை என்று புரிந்து சிவக்கும்!
என்னவென்று உணரவே இல்லையே ?
உச்சியிலிருந்து நோக்கினாயே இதை அப்போதுமா ?
சுற்றல் கண்டிருந்தேன் சேர்ந்தேன் - நான்!
சருகுகள் காலத்தின் கட்டாய மாற்றம்
அது சரி ! நீ நின்றேன் என்றதும் - சுற்றல்
விடவில்லையான காரணமும் உண்மையா ?
தகித்தாயே சில சமயம் அகங்காரமாய்
உன் கரைதலில்தான் உலகம் உய்க்கும் - என்று
சுள்ளென்று உரைத்தாயே நெருக்கத்தில்?
இயக்கத்தின் காரணமும் வெளிச்ச மூலமும்
உதித்த அர்த்தங்களும் - இதோ வரும்
இரவின் அணைப்பும் உன் மூலமா?
நான்தான் உதித்தேன் , சுற்றினேன் , கனன்றேன்
என் இயக்கம் ஏதுமின்றி - ஏதுமில்லா இயக்கத்தில்
ஒரே இடத்தில் பயணித்து அஸ்தமனம் உதயம் !
No comments:
Post a Comment