Friday, 24 January 2014

"Nannadu" "நன்னாடு"

OM VENKATESAYA !


நன்னாடு !

நெஞ்சழியும் கொடுமையெனில் 

என்னவென்று கேட்டீரே !


பசித்து அழும் தம் மகற்கு 

புசிக்க ஒரு அடி கொடுத்து 


ஓரம் சென்று கிழி துண்டால் 

கண்ணடக்கும் தந்தையர் !


பெற்ற வயிறு நிஜமாவே 

ரெண்டு நாளாய் எரியவே 


ஸ்பரிசத்தால் பிள்ளையின் 

வலி அடக்கும் அன்னையர் !


இளமையில் கல், 

இவர்களுக்கு வயிற்றில் !


பாரதத்தாய் பார்த்துப் பார்த்துப் 

பஞ்சடைத்துப் போய் விட்டாள் !


பாமரனின் வாயிலும் 

பண்பட்டோர் காதிலும் !


எதுவும் கேட்காததே 

நம்மவர்க்கு அடக்கம் !


செய்வதையே சொல்வார்கள் 

இவர்கள் எப்போதும் !


"ஏழைகளை உயர்த்துவோம்" ,

அங்கே யாருக்கும் பசிக்காதாம் !


என்ன கொடுமை இது 

எப்போதுதான் தீர்வது?


பாண்டித்யம் பெற்றவர்கள் 

பணம் மட்டும் பாராமல் 


பண்பட்ட பாரதத்தின் 

பதவி ஏற்க வேண்டும் !


எனக்கெதுவும் வேண்டாம் என 

சூளுரைத்த நல்லவர்கள் 


உள்ளத்தின் உள்ளிருந்து 

ஆட்சி செய்ய வேண்டும் !


எல்லோரும் செய்திடுவோம் 

இன்றே ஓர் நற்சபதம் 


ஆக்கிடுவோம் பாரதத்தை 

அகில முதல் நன்னாடாய் !







Tuesday, 21 January 2014

"Nagardhal" "நகர்தல்"

OM VENKATESAYA !

நகர்தல் !


சுவற்றில் சுண்ணாம்பு பெயர்ந்த 

இடங்களில் காந்தி , நேரு , மாரியம்மன் 

எங்கள் தெரு கூனன்  -  எல்லாரும் 

இஷ்டம்போல் இருந்தார்கள் .


ஜன்னலுக்குள் விரல் விட்டுக் கொண்டிருந்த 

மரக்கிளையில் கூத்தாடிப்பறவை ஒன்று 

விடாமல் விசிலடித்து உள்வெளியை 

நிறைத்துக் கொண்டிருந்தது !


தலைக்கு மேல் மின்விசிறி 

தர்ரீம் தர்ரீம் என்று 

ஒரு முழத்து ஒட்டடையை 

கஷ்டமாய் சுமந்தது !


நல்ல தடித்த பல்லி ஒன்று 

மிக லேசாகப் பதுங்கி - சரக் - என்று 

நாக்கு நீட்டி ஏமாந்து 

பூச்சியை கோட்டை விட்டது !


நாற்பது வயசுக்கு குறைவில்லாத 

வழுக்கைத் தலை கடிகாரம் 

நாலு மணியைப் பிடிக்க 

தட்டுத் தடுமாறி நகர்ந்து கொண்டிருந்தது !


மூணேமுக்கா காரன் செம்மண்ணில் 

கிளப்பி விட்ட புழுதியை வெல்ல முயன்று 

பக்கத்து சீட் பரசுராமன் துண்டில் 

தும்மலிட்டுத் தோற்றார் !


புது நெல்லின் மணம் வயக்காட்டிலிருந்து 

சாணத்துடன் கலந்து வந்து ... - பட்டணம் பொடி 

பலவந்தமாய் மூக்கில் புகுந்து 

நையாண்டி செய்தது !


"டீ சார் !" டேபிளில் டொப்பென்று 

வைக்கப்பட்டபோது, அந்த கிராமத்து ஆபீஸில் 

எனக்கும் ஒரு வேலை இருக்கிறதோ ?

என்று வீட்டிற்குக் கிளம்பத் தயாரானேன் !







Monday, 20 January 2014

"Mei Kaan" "மெய் காண்"

OM VENKATESAYA !

மெய் காண் !

கார்காலம் கண்டிருக்கிறீர்களா ?

காற்றும் மலையும் மண்ணும் 

நீராடை போர்த்தி மயங்கிப் புணருமே ?


கோடையில் இவையெல்லாம் 

தனித்தனியே போய்விட்டாற்போல 

ஒரு சோக மயக்கம் ? கம்பீரம் ?


சில கோடையில் உள்ளே மழை !

குளிரடிக்கக் கண்டீர்கள் !


சாலையில் போகும்போது  - எப்போதாவது 

சாலையைக் கண்டிருக்கிறீர்களா ?


அந்தச் சாலையின் சிரித்த முகம் -

கண்களைச் சுருக்கிக்கொண்டு, 

வெயில் கூசுமோ ?

பாவம் - கருத்து - போய்விட்டது !


ஒரு மகா வீரன் போல் 

நெஞ்சு நிமிர்த்திக் கிடக்கும் !


சில சமயம் பூமாலை சூட்டிக் கொள்வான்,

அந்திமக் காலத்தில் ! குளிர் விட்டது !

யாருக்கு சந்தோஷம் ?




Sunday, 19 January 2014

"Pagai Rasi" "பகை ரசி"

OM VENKATESAYA !





பகை ரசி ! 


நல்ல வேளை, இந்த உச்சி வெய்யிலை 

தனியாக நின்று தரிசிக்க எனக்கு 

தவமும் வாழ்க்கையும் கொடுத்தான் !


வெளியே நின்று வேலை நிமிர 

"சே " என்று நிழல் நாடும் அற்பம் 

எனக்கு அமையாமல் போனது!


குடை கொண்டு செல்கிறார்களே, 

குடையும் இவளும் சேர்ந்தல்லவா 

வெயிலில் இருக்கிறார்கள் ? நிழலாம் .. 


தனியாகத் தப்பித்தல் என்று கொள்ளலாமா ?

உலகில் எல்லாரும் சுயநலமிகள் 

என்று தினம் தினம் சுடப்படுகிறது.


பகைவன் பெரியவன் என்பதால் 

தான் மட்டும் பாதம் பணிந்து சிரிக்கும் 

வஞ்சகம் ! தற்சிறுமை ! பகையா, நட்பா ?


பகை ரசிக்கப் பழகியவன் பாக்கியசாலி ,

பகை அணைக்கப் பழகியவன்.. 

ஆதவனை அணைத்தவன் என்னைப்போல !



"Marathal" "மரத்தல்"

OM VENKATESAYA !


மரத்தல் 


வேஷத்திற்கு பஞ்சமேயில்லை 

முகத்திற்கு மாவு பூசாமல் ,

முகமே முகமூடியாய் !


சிரிக்கும்போது உள்ளே 

மலராமல் காய்ந்த சருகாய் !


ரொம்பத்  திறமையாய் வன்மம் காட்டாமல் 

தன் முகத்தை தரித்து சிரிக்கும் -

அனல் சுடும் நெடுநாள் கழித்து !


சாம்பல் பூத்த அடுப்பின் நெருப்பு 

அரிதார முகம் - உள்ளே ?


சிலது சிலையாகி விடும் - வேஷமா ?

மாமல்லபுரச் சிற்பத்திற்கு கூட 

உயிர் உண்டு - காரணம் -

சிற்பியா ? வேஷதாரிகளா ?


குமைந்து குமைந்து மனிதமே 

மரத்துப் போகாதோ ?


மரத்தல் என்றாலே என்ன ?

கிளை பரப்பி நிழல் கொடுத்து 

பூத்துச் சிரித்து வாசமாகி !

மரம் மரத்துப் போவதில்லையோ ?





Saturday, 18 January 2014

"Thalaipilla Thodakkam" "தலைப்பில்லா தொடக்கம்"

OM VENKATESAYA !


தலைப்பில்லா தொடக்கம் !

ஆண்டவன் கண்டிப்பாய் 

ஆண்டு கொண்டிருக்கிறான் !

என்னையும், என் உடம்பையும் , 

மனதிருந்தால், - அதனையும் .


புதுவெள்ளம் போன்று 

ஆரம்பித்திருக்கிறது !

தெளிய வேண்டும் !


இப்போதும் மேலேதான் 

வெள்ளத்தின் வேகம் !

அடியில் எப்போதும் வேகமில்லை !

வெள்ளத்திலும் கூட !


ஓடிக்கொண்டே இருக்கிறது 

நுரையும், சத்தையுமாய்,

கலங்கலும், சத்தமுமாய் !


காவியுடுத்து செல்கிறது 

புதுவெள்ளம்  - 

எவ்வளவு ஆர்ப்பாட்டம்,

போலிச்சாமியார் ?


ஆற்றுப்படுகையில் ,

உள்ளே படுகையில், 

ஓட்டமில்லை ! நிறமில்லை !

காவிக்கு வந்தனம் !