OM VENKATESAYA !
நகர்தல் !
நகர்தல் !
சுவற்றில் சுண்ணாம்பு பெயர்ந்த
இடங்களில் காந்தி , நேரு , மாரியம்மன்
எங்கள் தெரு கூனன் - எல்லாரும்
இஷ்டம்போல் இருந்தார்கள் .
ஜன்னலுக்குள் விரல் விட்டுக் கொண்டிருந்த
மரக்கிளையில் கூத்தாடிப்பறவை ஒன்று
விடாமல் விசிலடித்து உள்வெளியை
நிறைத்துக் கொண்டிருந்தது !
தலைக்கு மேல் மின்விசிறி
தர்ரீம் தர்ரீம் என்று
ஒரு முழத்து ஒட்டடையை
கஷ்டமாய் சுமந்தது !
நல்ல தடித்த பல்லி ஒன்று
மிக லேசாகப் பதுங்கி - சரக் - என்று
நாக்கு நீட்டி ஏமாந்து
பூச்சியை கோட்டை விட்டது !
நாற்பது வயசுக்கு குறைவில்லாத
வழுக்கைத் தலை கடிகாரம்
நாலு மணியைப் பிடிக்க
தட்டுத் தடுமாறி நகர்ந்து கொண்டிருந்தது !
மூணேமுக்கா காரன் செம்மண்ணில்
கிளப்பி விட்ட புழுதியை வெல்ல முயன்று
பக்கத்து சீட் பரசுராமன் துண்டில்
தும்மலிட்டுத் தோற்றார் !
புது நெல்லின் மணம் வயக்காட்டிலிருந்து
சாணத்துடன் கலந்து வந்து ... - பட்டணம் பொடி
பலவந்தமாய் மூக்கில் புகுந்து
நையாண்டி செய்தது !
"டீ சார் !" டேபிளில் டொப்பென்று
வைக்கப்பட்டபோது, அந்த கிராமத்து ஆபீஸில்
எனக்கும் ஒரு வேலை இருக்கிறதோ ?
என்று வீட்டிற்குக் கிளம்பத் தயாரானேன் !
No comments:
Post a Comment