Tuesday, 25 February 2014

"போதைவிஷம் விட்டு விடு" "BOdhai visham vittu vidu"




போதை விஷம் விட்டு விடு !



கல்லூரியில்  சேர வேண்டும்

கலைகள் பல கற்க வேண்டும் 

ஆசைப்பட்டேன் பள்ளியிலே

படித்த அந்த நாட்களிலே !


பல பரிட்சை தேறிவிட்டேன்

பள்ளியையும் தாண்டி விட்டேன்

கல்லூரியில் சேர்ந்து விட்டேன்

கவலைகளை மறந்து விட்டேன் !


படிப்பை விட தெரிந்து கொள்ள

எத்தனையோ உள்ளதையா,

அத்தனையும் தெரிந்து - கொள்ள

சில நொடியே ஆனதையா !


சில நொடியில் சில பொடிகள்

என்னுள் செய்த மாயமென்ன !

சில மணிகள் வானுலகில்

நான் சென்று இருந்ததென்ன !


பழகிவிட்டு நிறுத்தி விட்டால்

எனதுடலும் துடிப்பது ஏன் ?

பழக்கி விட்ட நண்பர்களும்

எனைப் பார்த்து சிரிப்பது ஏன் ?


விட்டுவிடு விட்டுவிடு

இப்பழக்கம் நிறுத்திவிடு,

எச்சரிக்கை மணியதுவும்

எனக்குள்ளே ஒலித்ததுவே !


முடியாது முடியாது

அது மட்டும் முடியாது

இதயத்தின் ஒரு பகுதி

ஆசை கொண்டு அலைந்ததுவே !


உன் குடும்ப நிலை எண்ணி

இவைகளை நீ நீக்கிவிடு

உனை மிஞ்ச எவருண்டு

நீக்கிவிட்டு படித்துவிடு !


இப்போது இல்லையென்றால்

எப்போது அனுபவிப்பாய் ?

அனுபவித்த பிறகே நீ

நன்றாகத்தான் படிப்பாய் !


வேண்டாமே இப்பழக்கம்

ஒழித்து விடு உயிரறுக்கும்

இதயத்தின் மறுபகுதி

என்னையே எச்சரிக்கும் !


நிச்சயமாய் முடியாது

இல்லாமல் நடவாது

எடுத்துக்கொள் எனது வெறி

தலையதையும் தாண்டிவிடும் !


தொட்டுவிட்டால் சுட்டுவிடும்

என்றே நீ எண்ணிக்கொள்

சுட்டுவிட்டால் உன் வாழ்க்கை

பட்டுவிடும் மனதில்கொள் !


முடியவில்லை, முடியவில்லை,

என்ன நானும் செய்திடுவேன் ?

இதை நானும் விட்டுவிட்டால்

உயிரையே விட்டிடுவேன் !


உயிரதுவே போனாலும்

போகட்டும் தொட்டிடாதே ,

நீ வந்ததெதற்காக

எண்ணிப்பார் மறந்திடாதே !


தாங்காது தாங்காது

இக்கொடுமை தாங்காது

இக்கொடுமைதனைத் தவிர்த்து

 சொர்க்கத்தை எட்டிவிடு !


ஆஹா நான் எட்டிவிட்டேன்

சொர்க்கமதை மிக எளிதில்

இதையா நான் இழந்துவிட

இருந்திட்டேன் மடமையினால் !


போதையது இறங்கியதும்

புத்தியதும் திரும்பியது

"தவறிவிட்டாய் மறுமுறையும் " ,

இடித்து அது கூறியது !


ஐயையோ பெருந்தவறு

அன்றோ நான் செய்திட்டேன்

என் நிலைமை நானுணர்ந்து

பெரிதாக அழுகின்றேன் !











Monday, 17 February 2014

"ஏன் படைத்தாய் ?" " En Padaithai ?"

ஏன்  படைத்தாய் ?



குயிலாய் நான் பிறந்திருந்தால்

கூவி இன்பம் கண்டிருப்பேன் !


மரமாய் நான் இருந்திருந்தால்

மகிழ்ந்து நிழல் தந்திருப்பேன் !


பூவாய் நான் பூத்திருந்தால்

புது மணமும் பெற்றிருப்பேன் !


காவிரியாய் வந்திருந்தால்

கரை புரண்டு நிறைந்திருப்பேன் !


வார்த்தையாக ஆயிடினும்

கவிதையோடு கலந்திருப்பேன் !


கற்பூரக் கட்டியானால்

ஜோதிரூபம் கொண்டிருப்பேன் !


குரங்காகிப் போயிடினும்

குறையில்லாதிருந்திருப்பேன் !


மலையாக உயர்ந்திருந்தால்

பனியோடு மகிழ்ந்திருப்பேன் !


வெண்புறாக் கூட்டத்தோடு

பறவையாகி பறந்திருப்பேன் !


நெற்கதிரின் ஓர் மணியாய்

வயல்வெளியில் சுகித்திருப்பேன் !


சலங்கை மணியானால்

சத்தமேனும் செய்திருப்பேன் !


சந்தனமாய் இறைவா ,

உன் மேலேனும் பட்டிருப்பேன் !


மனிதனென்று ஏன் படைத்தாய் , இறைவா ?

என்னை பயனில்லாதாக்கியதேன் இறைவா ?


பாவப்பிறவியிதை விட்டொழிக்க - இனி

என்றென்றும் உனை நோக்கி தவமிருப்பேன் !







          

Wednesday, 12 February 2014

"Deiva Nimisham" "தெய்வ நிமிஷம்"

தெய்வ நிமிஷம் !



எண்ணமற்று இருப்பதுதான் 

சந்தோஷம் என்றால் -

ரொம்ப சந்தோஷம் இப்போது !


நிச்சயமாகி விட்டது 

நிகழ்கால மடமைகளும் 

எதிர்கால வரவுகளும் - சந்தோஷமாய் ?


சிலருக்கு புதுசுகளே சந்தோஷம் 

புதுசுகளில் எண்ணமுண்டு -

என்பதால் எனக்கு இல்லை !


காலம் கடந்து நிற்க 

முயன்றும் - காலமே 

காலை வாரி விடுகிறது ;


காதல் என்பது இன்னும் 

சரிவரப் புரியவில்லை 

வாழ்க்கையே காதலான போதும் !


வானம் தொட்டால்தான் 

அடி மனதில் நிறைவு - மேகம் 

முகம் உரசக்  குளிர்ந்தபோதும் !


சிலர் சுலபமாய் வாழ்கிறார்கள், 

சந்தர்ப்பம் கண்டு

சந்ததி கொண்டு மேகம் தொட்டு ! 


என்னால் முடியவில்லை - இப்போதும் ,

மேகத்தால் குளிர்ந்தது போல் 

அப்பட்டமாக நடித்துக் கொண்டு ;


போதும் என்று சொன்னாலும் 

உனக்குத்  தெரியாது என்று 

பதில் சொல்லும் , என் சுற்றம் - நானும்!


வாழ்வைக் கப்பம் கட்டி 

வயது வளர்க்கிறேனோ ? 

வயதுதான் கப்பம் கேட்கிறது !


அப்பட்டமாய் வாய் திறந்து 

சிரிக்க இன்னும் கூட அச்சம் 

பொய் வேஷர்கள் திறமைசாலிகள் !


தடம் மறந்து ஓடுவார்கள் 

பிடித்து விட்டதாய் அலட்டுவார்கள் 

அங்கொருவர் இங்கொருவர் அப்படியில்லை !


சாவைக் கண்டு பயமில்லை - அட !

இவர்களும் அதைப்பற்றி 

எண்ணியே அறியாததால் !


கண் முன்னே காலன் நிற்க.. 

கட்டித் தழுவிச் செல்ல ஆசை 

கிடைக்குமா அந்த தெய்வ நிமிஷம் ?












Sunday, 9 February 2014

"Adhu" "அது"



அது !


இவைகள் ஏன் இப்படி -

          சில சமயம் புரிவதில்லை ;

இவைகள் என்பது என்னவென்று 

          எப்போதும் புரியவில்லை !


பைத்தியமாய் அலைந்து வாழ்வு 

           தேடி சிரித்துக் களித்து 

அலைவது சிலர் சுகம் !


சிந்தனையில் சோறொன்றே 

           குறியாய் எறும்பு போல 

அல்லது நாய் போலவா ?


நிம்மதி என்று சிலர் 

           நித்தமும் தெரிந்ததுபோல் 

நிதர்சனமாய், அலங்காரமாய் ;


கவலைதான் என்று சிலர் 

           கண்டது தாமே போல் 

வெளியே நிர்வாணமாய் ;


நிர்வாணம் என்பது ஆடை 

           துறத்தல் என்று 

உன்னைப்போல் மூடர்களாய் ;


உன்னைத் தெரிந்தே கூட 

           மூடனாக்கும் - என் 

அதுவைப் போன்ற கயவர்களாய் ?




Saturday, 8 February 2014

"Mazhai" "மழை"

மழை !


நினைக்கத் தெரியாத சில 

மழைக்காலங்களும் கூட !


நான் பிறந்த மறுநாளே 

பெய்து ஓய்ந்த மழை 

அம்மா சொல்லித்தான் தெரியும் !


அடுத்த சில மழைகளை 

காய்ச்சலால் உணர்த்துவேனாம் 

இதுவும் அவள் சொன்னதுதான் !


முதல் வகுப்பு சேர்ந்த அன்று 

வந்த காய்ச்சல் மழையால்தான்,

சொல்லிவிட்டு பெருமையாய் பார்ப்பாள் !


ஜன்னலோரம் அமர்ந்து கமலியும் 

நானும் மூணோன்மூணு  சொல்ல 

வரும் மழைகள் நிற்காமல் கொட்டும் !


ஏழெட்டு பேர் ஊஞ்சலில் ஆடியபோது 

திடீரென்று பிடித்தது ஒருநாள் 

காற்று ஜில்லென்று தாவியது !


குளத்தில் குதித்துத் துளைத்தபோது 

கண்மறைத்துப் பெய்த மழையிலும் 

குளத்திலும் போட்ட ஆட்டம் ! 


இந்த மழை பார் 

இன்று பெய்தது அவளோடு 

இருந்து வந்த சில மணிகளில் 


சில சமயம் கொட்டும்.. 

இந்த மழை நிற்காமல் 

மண் நனைக்காமல் மனசுக்குள் !


வருஷக்கணக்காய் பெய்யாமல் 

பொய்த்த மழை தெரியுமா ?

இங்கு குடங்கள் சொல்லும் !


மலை மேல் பெய்த மழை 

தெரியுமா, எல்லாரையும் 

ஏங்க வைக்கும் சடசட அது !


இப்போதும் பெய்கிறது 

நான் தனிமை உணரும்போது 

தோழனாய் கைகோர்க்கும் 


புத்தகம் படிக்கும்போது 

சில தடவை மண்வாசம் 

தடவித் தழுவும் எங்களை 


தெரியாமல் பெய்யும் எப்போதாவது 

கண் விழிக்க குளுமை வரும் 

அடடா ! சென்ற இரவு வேண்டும்.





Saturday, 1 February 2014

"Naal" "நாள்"

OM VENKATESAYA !


நாள் ! 

அம்மா, பால் !

கீரை வேணுமாம்மா ?

பேப்பர் வந்தாச்சா ?

நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பது ;

எவ்வளவு நேரம் குளிப்பே?

சின்னது எழுந்துடுத்தா ?

கிளம்புடா சீக்கிரம் !

டிபன் பாக்ஸ் எங்கே ?

எட்டரை போயிருக்கும் ;

அம்மா வரேன் ! அப்பா வரேன் !

சில்லரையா கொடும்மா !

ஏன் லேட்டு ?

பர்மிஷன்லாம் கிடையாது ;

அப்பாடா, என்ன கூட்டம் !

என்ன வெய்யில், ஊரா இது !

இந்தாங்கோ காப்பி ;

அந்த டிவிய போடு!

கேஸ் வந்துடுத்தா ?

பட்டுக்குட்டி , என்ன அழுகை ?

கரண்ட் போச்சா ? நாசமாப்போக ;

இன்னக்கி மோர் சாதந்தான் ;

சாப்பிட வாடா - ஹோம் வொர்க் முடுஞ்சுதா ?

அஞ்சு மணிக்கு அலாரம் வைங்கோ,

நாளைக்கு எட்டரைய புடிக்கணும் !