Monday, 17 February 2014

"ஏன் படைத்தாய் ?" " En Padaithai ?"

ஏன்  படைத்தாய் ?



குயிலாய் நான் பிறந்திருந்தால்

கூவி இன்பம் கண்டிருப்பேன் !


மரமாய் நான் இருந்திருந்தால்

மகிழ்ந்து நிழல் தந்திருப்பேன் !


பூவாய் நான் பூத்திருந்தால்

புது மணமும் பெற்றிருப்பேன் !


காவிரியாய் வந்திருந்தால்

கரை புரண்டு நிறைந்திருப்பேன் !


வார்த்தையாக ஆயிடினும்

கவிதையோடு கலந்திருப்பேன் !


கற்பூரக் கட்டியானால்

ஜோதிரூபம் கொண்டிருப்பேன் !


குரங்காகிப் போயிடினும்

குறையில்லாதிருந்திருப்பேன் !


மலையாக உயர்ந்திருந்தால்

பனியோடு மகிழ்ந்திருப்பேன் !


வெண்புறாக் கூட்டத்தோடு

பறவையாகி பறந்திருப்பேன் !


நெற்கதிரின் ஓர் மணியாய்

வயல்வெளியில் சுகித்திருப்பேன் !


சலங்கை மணியானால்

சத்தமேனும் செய்திருப்பேன் !


சந்தனமாய் இறைவா ,

உன் மேலேனும் பட்டிருப்பேன் !


மனிதனென்று ஏன் படைத்தாய் , இறைவா ?

என்னை பயனில்லாதாக்கியதேன் இறைவா ?


பாவப்பிறவியிதை விட்டொழிக்க - இனி

என்றென்றும் உனை நோக்கி தவமிருப்பேன் !







          

No comments:

Post a Comment