Wednesday, 12 February 2014

"Deiva Nimisham" "தெய்வ நிமிஷம்"

தெய்வ நிமிஷம் !



எண்ணமற்று இருப்பதுதான் 

சந்தோஷம் என்றால் -

ரொம்ப சந்தோஷம் இப்போது !


நிச்சயமாகி விட்டது 

நிகழ்கால மடமைகளும் 

எதிர்கால வரவுகளும் - சந்தோஷமாய் ?


சிலருக்கு புதுசுகளே சந்தோஷம் 

புதுசுகளில் எண்ணமுண்டு -

என்பதால் எனக்கு இல்லை !


காலம் கடந்து நிற்க 

முயன்றும் - காலமே 

காலை வாரி விடுகிறது ;


காதல் என்பது இன்னும் 

சரிவரப் புரியவில்லை 

வாழ்க்கையே காதலான போதும் !


வானம் தொட்டால்தான் 

அடி மனதில் நிறைவு - மேகம் 

முகம் உரசக்  குளிர்ந்தபோதும் !


சிலர் சுலபமாய் வாழ்கிறார்கள், 

சந்தர்ப்பம் கண்டு

சந்ததி கொண்டு மேகம் தொட்டு ! 


என்னால் முடியவில்லை - இப்போதும் ,

மேகத்தால் குளிர்ந்தது போல் 

அப்பட்டமாக நடித்துக் கொண்டு ;


போதும் என்று சொன்னாலும் 

உனக்குத்  தெரியாது என்று 

பதில் சொல்லும் , என் சுற்றம் - நானும்!


வாழ்வைக் கப்பம் கட்டி 

வயது வளர்க்கிறேனோ ? 

வயதுதான் கப்பம் கேட்கிறது !


அப்பட்டமாய் வாய் திறந்து 

சிரிக்க இன்னும் கூட அச்சம் 

பொய் வேஷர்கள் திறமைசாலிகள் !


தடம் மறந்து ஓடுவார்கள் 

பிடித்து விட்டதாய் அலட்டுவார்கள் 

அங்கொருவர் இங்கொருவர் அப்படியில்லை !


சாவைக் கண்டு பயமில்லை - அட !

இவர்களும் அதைப்பற்றி 

எண்ணியே அறியாததால் !


கண் முன்னே காலன் நிற்க.. 

கட்டித் தழுவிச் செல்ல ஆசை 

கிடைக்குமா அந்த தெய்வ நிமிஷம் ?












No comments:

Post a Comment