Wednesday, 11 June 2014

"MoodargaL KoottaththilE" "மூடர்கள் கூட்டத்திலே"

"மூடர்கள் கூட்டத்திலே"



பைத்தியமே! பைத்தியமே! 

என்கின்றார் எனை இவர்கள்,

பொய்யான வாழ்க்கையிதை 

ரசிக்கும் இந்த மடையர்கள்.


பிறப்பு முதல் இறப்பு வரை 

அழுத்தப்பட்டு துரத்தப்பட்டு,

செல்ல வேண்டும் இறுதியிலே 

இவ்வுடலை விட்டுவிட்டு.


இவ்வுடலின் இன்பமதை 

பெற்றிடவே துடிக்கின்றார்,

இவ்வுடலே நமதில்லை 

புரியாமல் இருக்கின்றார்.


என் விருப்பம் இல்லாமல் 

ஆடையதைப் பூண்டிட்டேன்,

அவ்விருப்பம் அடைந்திடவே 

அதை நானும் துறந்திட்டேன்.


பார்ப்பவர்கள் சிரிக்கின்றார் 

புரியாமல் வெறுக்கின்றார்,

விளக்கமொன்றை நானளிக்க 

அடித்தெனையே விரட்டுகின்றார்.


என் தாயும் எனை வெறுத்து 

தன் வாழ்க்கை நீத்துவிட்டாள்,

என் தங்கை என்னால்தான் 

தாய் வாழ்க்கை முடிந்ததென்றாள்.


அதைக்கேட்க என் ஆத்மா 

பெரிதாக சிரிக்கின்றது,

உன் கொள்கை விட்டிடாதே 

எனக்கதுவும் சொல்கின்றது.


மனிதர்களே ! வேண்டாமே 

உங்களது பொய் முகங்கள்,

எல்லோரும் ஆடிடுவோம் 

சேர்ந்து இங்கு வாருங்கள்.


இது எனது ; இது உனது ; 

ஏன் இந்தப் பாகுபாடு, 

எல்லாமே நமது என்று 

பாடி நீயும் கூத்தாடு.


சொல்லிவிட்டு ஆடுகின்றேன் 

மற்றவர்கள் சாடுகின்றார்,

பித்தனிவன் பேச்செதற்கு 

பிடித்து எனைத் தள்ளுகின்றார்.


பெண்களையே தொட்டுவிட்டால் 

பெருங்குற்றம் என்கின்றார்,

ஆத்மாவில் பெண்களில்லை 

நான் சொன்னால் சிரிக்கின்றார்.


ஆத்மாவை எண்ணி நானும் 

தொட்டுவிட்டேன் ஒரு பெண்ணை,

எல்லோரும் சேர்ந்து கொண்டு 

பிளந்தார்கள் அடித்து என்னை.


பைத்தியமாம் நானென்று 

சொல்கிறார்கள் மற்றவர்கள்,

பைத்தியங்கள் அவர்கள்தான் 

அறிவதுவே அற்றவர்கள்.


இம்மூடர்கள் கூட்டத்தில் 

வாழ்வதுவும் சாத்தியமா,

சொல்லுங்கள் பெரியோரே 

நான் என்ன பைத்தியமா ?        




































  

   

No comments:

Post a Comment