Wednesday, 6 September 2023

ஆரூரா! தியாகேசா!!

 




ஆரூரா! தியாகேசா!!

 

ஆழியின் நாயகன் , மார்தனில் கொண்டோன்

ஆழிசூழ் பூமியை , ஊழியில் கொள்வோன்

ஆழியின் தேரிலே , அகிலமே கண்டான்

ஆழியே அகிலமே, தானென நின்றான் !

 

கண்டவர் விண்டுளர் விண்டவர்  கண்டுளர்

கண்டுளேன் விண்டுளேன் தியாகேச ஈசா !

கண்டதும் உன்பதம் கொண்டதும் உன்பதம்

அண்டினேன் உன்தலம் விண்தலம் வேறோ ?

 

ஆரூரா! தியாகேசா!! ஆரூரா! தியாகேசா!!

 

ஆருயிர் கொற்றவன் ஆரூரில் அரசன்

பல்லுயிர் காரணன் வன்மீகநாதன்

என்னுயிர் நாயகன் வீதி விடங்கன்

நல்லுயிர் காவலன் தியாகேச ஈசன் !

 

நோக்கினேன் உன்முகம் நோக்கமே நீக்கி  

போக்கினேன் என் அகம் உன்னையே தேக்கி

சொக்கினேன் என் விழி சொக்கனை நோக்கி

ஆக்கினேன் நல்வழி பாபங்கள் போக்கி

 

என்னிடம் உன்னிடம் அவனிடம் ஆக

காலிடம் காலனும் தன்கதி நோக

எவ்விடம் ஆகினும் கண்டமே போக

தேர்வடம் பற்றுவோம் ஈசனை ஏக !

 

தீர்த்தமும் கமலம் ஆலயம் கமலம்

அம்பிகை நாமமும் அருள் தரும் கமலம்

நிர்மலம் தந்திடும்  ரூபமே கமலம்

நித்தமும் நாடுவோம் அவள் பாத கமலம் !

 

 ஆதியும் அந்தமும் இல்லாத ஊரோன்

ஆழியின் பேர் கொண்ட அற்புதத் தேரோன்

ஜனனமே முக்தியாம் தியாக விநோதன்

மரணமே நிர்பயம் ஆக்கிடும் நாதன் !

 

சுள்ளேனச் சுட்டதுன் உள்ளெனக் கண்டால்

கண்ணெதிர் மாயையும் பொய்யெனக் கண்டால்

விண்திரை நீங்கவே விதியினைக் கண்டால்

உன் உளம் ஓயும் தியாகேசனைக் கண்டால் !

 

விண்வழி செல்லுவோர் மண் வழி வந்தார்

பகலவன் மறையவே பகலவன் கண்டார்

மெய் கொண்ட மானிடர் மெய் கண்டு நின்றார்

தீராத ஆனந்தம் புற்றிடங்கொண்டார் !


CLICK THE LINK TO SEE THE VIDEO --- 


https://youtu.be/YwH0vN8lghU?si=EFJQYfj1c_rsdGoM

 

 

Monday, 17 July 2023

“ஏதும் வேண்டா ! ”

 “ஏதும் வேண்டா ! ”



யாரும் வேண்டா தகிக்கும் தனிமையிலை 

ஏதும் வேண்டா தவிர்க்கும் தனிமை ! 

நாடும் நாடா துதிக்கும் ஒருமையிலை

நாடும் நாடாது உதிக்கும் ஒருமை !


போகும் போதாது போகும் வறுமையிலை  

போகும் போதொன்று போகும் வறுமை !

சேரும் போதொன்று சேரும் வரவுயிலை 

சேரும் போதொன்று சேரும் வரவு !


கட்டும் கட்டுண்டு நிற்கும் பேதமிலை 

கட்டும் கட்டாண்டு நிற்கும் பேதம் !

முட்டும் அடங்காது முட்டும்  எண்ணமிலை 

முற்றும் அடங்காது முற்றும் எண்ணம் ! 


அடிகோலும்  அடி கொண்டு கோரும் நாட்டமிலை 

அடிகோரும் அடி  கொண்டு கோரும் நாட்டம் !

அடி ஏனோ நிற்காது ஓடும் ஓட்டமிலை 

அடியாரோ நிற்காது ஓடும் ஓட்டம் !

 

புவி கொள்ளும் தன் தொடர் காணும் ஆவலிலை 

புவி கொள்ளும், தன் தொடர் காணும் ஆவல் !

புவி கொள்ளும் நாள் தேடி அஞ்சும் நெஞ்சமிலை 

புவி கொள்ளும் நாள் தேட மிஞ்சும் நெஞ்சம் !


கூடக் கூடொன்று நாடும் ஏக்கமிலை 

கூடும் கூடாது போகும் ஏக்கம் !

நாடிக்  கேடின்றி தேங்கும் தேக்கமிலை 

நாடிக்  கேடின்றி தேங்கும் தேக்கம் !


தன் போல் தன் முன்னதன் போல் தோற்றமிலை  

தன் போல் தன் முன்-அதன் போல் தோற்றம் !

தன்பால்  தன் பின்னதன்பால்  கொள்ளலிலை  

தன்பால் தன் பின் - அதன் பால் கொள்ளல் !


கொண்டோர் கண்டதைக் கொண்டோர் மீதமிலை 

கொண்டோர் கண்டு - அதைக் கொண்டோர் மீதம் ! 

கண்டோர் கொண்டதைக் கண்டோர் தோற்றமிலை

கண்டோர் கொண்டதைக் கண்டோர் தோற்றம் !


புரிந்தும் புரியாது போகும் போக்குமிலை  

பிரிந்தும் பிரியாது போகும் போக்கு !

நேர்ந்தும் நேராது போகும் நோக்கமிலை 

நேர்ந்தும் நேராது போகும் நோக்கம் !