Wednesday, 6 September 2023

ஆரூரா! தியாகேசா!!

 




ஆரூரா! தியாகேசா!!

 

ஆழியின் நாயகன் , மார்தனில் கொண்டோன்

ஆழிசூழ் பூமியை , ஊழியில் கொள்வோன்

ஆழியின் தேரிலே , அகிலமே கண்டான்

ஆழியே அகிலமே, தானென நின்றான் !

 

கண்டவர் விண்டுளர் விண்டவர்  கண்டுளர்

கண்டுளேன் விண்டுளேன் தியாகேச ஈசா !

கண்டதும் உன்பதம் கொண்டதும் உன்பதம்

அண்டினேன் உன்தலம் விண்தலம் வேறோ ?

 

ஆரூரா! தியாகேசா!! ஆரூரா! தியாகேசா!!

 

ஆருயிர் கொற்றவன் ஆரூரில் அரசன்

பல்லுயிர் காரணன் வன்மீகநாதன்

என்னுயிர் நாயகன் வீதி விடங்கன்

நல்லுயிர் காவலன் தியாகேச ஈசன் !

 

நோக்கினேன் உன்முகம் நோக்கமே நீக்கி  

போக்கினேன் என் அகம் உன்னையே தேக்கி

சொக்கினேன் என் விழி சொக்கனை நோக்கி

ஆக்கினேன் நல்வழி பாபங்கள் போக்கி

 

என்னிடம் உன்னிடம் அவனிடம் ஆக

காலிடம் காலனும் தன்கதி நோக

எவ்விடம் ஆகினும் கண்டமே போக

தேர்வடம் பற்றுவோம் ஈசனை ஏக !

 

தீர்த்தமும் கமலம் ஆலயம் கமலம்

அம்பிகை நாமமும் அருள் தரும் கமலம்

நிர்மலம் தந்திடும்  ரூபமே கமலம்

நித்தமும் நாடுவோம் அவள் பாத கமலம் !

 

 ஆதியும் அந்தமும் இல்லாத ஊரோன்

ஆழியின் பேர் கொண்ட அற்புதத் தேரோன்

ஜனனமே முக்தியாம் தியாக விநோதன்

மரணமே நிர்பயம் ஆக்கிடும் நாதன் !

 

சுள்ளேனச் சுட்டதுன் உள்ளெனக் கண்டால்

கண்ணெதிர் மாயையும் பொய்யெனக் கண்டால்

விண்திரை நீங்கவே விதியினைக் கண்டால்

உன் உளம் ஓயும் தியாகேசனைக் கண்டால் !

 

விண்வழி செல்லுவோர் மண் வழி வந்தார்

பகலவன் மறையவே பகலவன் கண்டார்

மெய் கொண்ட மானிடர் மெய் கண்டு நின்றார்

தீராத ஆனந்தம் புற்றிடங்கொண்டார் !


CLICK THE LINK TO SEE THE VIDEO --- 


https://youtu.be/YwH0vN8lghU?si=EFJQYfj1c_rsdGoM

 

 

No comments:

Post a Comment