Wednesday, 13 August 2014

"பம்பரம்" "pambaram"




பம்பரம் 

 
மறுபடியும் கவிதை எழுதும் ஆசை 

விட்ட குறை தொட்ட குறை போல் 


எங்கிருந்தோ லேசாக மல்லிகையின் மணம் 

அடைத்து விட்ட ஜன்னல்களையும் 


கதவுகளையும் மோதித் திறந்து கொண்டு ! 

நீ என்ன மன்மதனா ? இந்திரனா ?


எல்லாக்கேள்விகளுக்கும் பதில்கள் இல்லை எப்போதும் 

பழையன கழியும் முன்னே புது மணம் 


இது - என்ன வாழ்க்கை எனச்சொல்லும் வயதா ?

பம்பரத்தின் சாட்டையை சிறிது நேரம் 


மாலையாகப் போட்டுக்கொள்ளுங்கள் பாவிகளே,

அது சற்றே தனக்காக சுற்றாமல் கிடக்கட்டும் !


நான்தான் மாறிப் போயிருக்கிறேனே 

இது என்ன கவிதையா திருஷ்டிப்பொட்டா 


கீழே விழுகிறாயா அல்லது திசை தேடிப் போகிறாயா 

வழியில்லா தவறுதலுக்கு மரண தண்டனையா ?


இல்லை என்னும் தைரியம் , 

ஆகா என்ன வாசம் ! 




 




Wednesday, 9 July 2014

" valuvaana pidi " " வலுவான பிடி "

வலுவான பிடி !


நல்ல வலுவான பிடி !

மூச்சு முட்ட , புத்தி பேதலிக்க , தவிக்க 

விடவே விடாது !


முயன்றாலும் முடியாததை 

பிடித்தே தீர வேண்டும்  - சகல சுகமும் 

தெவிட்டினாலும் வேண்டும் !


உன்னை இழந்தாலும் நீ 

நகர முடியாது - மனிதன் வாழ 

வாழ்க்கை மட்டும் வாங்க  முடியவில்லை !


மூளைக்குள் சூடு பரவ, உடலெங்கும்

தாகமெடுக்க , உறுதியாய், பாவமாய் 

நீர்  அருந்த  மறுக்கும் மக்கள் !


எல்லாம் அடைந்து மேலும் 

தேடும்போது, கேள்வி வரவில்லை ?

உன் உடம்பிலிருந்தாவது ?  ஏன் இப்படி ?


ஊரோடு  ஒத்து வாழ்கிறார்கள் 

படிகளில் ஏறிக்கொண்டே இருக்கிறார்கள் 

மொட்டைமாடி  போன பிறகு - வானம் தெரியும் !


ரசிக்காமல் பயந்து போவார்கள் 

வானம் பார்த்து ! பக்கத்து மாடி எத்தனை அழகு !

பாய்ந்து பிடிக்கலாமா ? வலுவான பிடி .





















Wednesday, 11 June 2014

"MoodargaL KoottaththilE" "மூடர்கள் கூட்டத்திலே"

"மூடர்கள் கூட்டத்திலே"



பைத்தியமே! பைத்தியமே! 

என்கின்றார் எனை இவர்கள்,

பொய்யான வாழ்க்கையிதை 

ரசிக்கும் இந்த மடையர்கள்.


பிறப்பு முதல் இறப்பு வரை 

அழுத்தப்பட்டு துரத்தப்பட்டு,

செல்ல வேண்டும் இறுதியிலே 

இவ்வுடலை விட்டுவிட்டு.


இவ்வுடலின் இன்பமதை 

பெற்றிடவே துடிக்கின்றார்,

இவ்வுடலே நமதில்லை 

புரியாமல் இருக்கின்றார்.


என் விருப்பம் இல்லாமல் 

ஆடையதைப் பூண்டிட்டேன்,

அவ்விருப்பம் அடைந்திடவே 

அதை நானும் துறந்திட்டேன்.


பார்ப்பவர்கள் சிரிக்கின்றார் 

புரியாமல் வெறுக்கின்றார்,

விளக்கமொன்றை நானளிக்க 

அடித்தெனையே விரட்டுகின்றார்.


என் தாயும் எனை வெறுத்து 

தன் வாழ்க்கை நீத்துவிட்டாள்,

என் தங்கை என்னால்தான் 

தாய் வாழ்க்கை முடிந்ததென்றாள்.


அதைக்கேட்க என் ஆத்மா 

பெரிதாக சிரிக்கின்றது,

உன் கொள்கை விட்டிடாதே 

எனக்கதுவும் சொல்கின்றது.


மனிதர்களே ! வேண்டாமே 

உங்களது பொய் முகங்கள்,

எல்லோரும் ஆடிடுவோம் 

சேர்ந்து இங்கு வாருங்கள்.


இது எனது ; இது உனது ; 

ஏன் இந்தப் பாகுபாடு, 

எல்லாமே நமது என்று 

பாடி நீயும் கூத்தாடு.


சொல்லிவிட்டு ஆடுகின்றேன் 

மற்றவர்கள் சாடுகின்றார்,

பித்தனிவன் பேச்செதற்கு 

பிடித்து எனைத் தள்ளுகின்றார்.


பெண்களையே தொட்டுவிட்டால் 

பெருங்குற்றம் என்கின்றார்,

ஆத்மாவில் பெண்களில்லை 

நான் சொன்னால் சிரிக்கின்றார்.


ஆத்மாவை எண்ணி நானும் 

தொட்டுவிட்டேன் ஒரு பெண்ணை,

எல்லோரும் சேர்ந்து கொண்டு 

பிளந்தார்கள் அடித்து என்னை.


பைத்தியமாம் நானென்று 

சொல்கிறார்கள் மற்றவர்கள்,

பைத்தியங்கள் அவர்கள்தான் 

அறிவதுவே அற்றவர்கள்.


இம்மூடர்கள் கூட்டத்தில் 

வாழ்வதுவும் சாத்தியமா,

சொல்லுங்கள் பெரியோரே 

நான் என்ன பைத்தியமா ?        




































  

   

Monday, 9 June 2014

"Iniyana" " இனியன !"

இனியன !



நேற்று வரை இந்த நினைவில்லை 

வாழ்வையே கவிதையாய் 

வாழ்ந்து காட்டும் வேள்வி !


புனையாத கவிதைகள் 

காற்றோடு கலந்து 

காலங்காலமாய் அழைப்பது போல !


எதையுமே எதிர்பார்க்காத 

குழந்தையின் சிரிப்பாய் 

கவிதை எப்போதோ வருகிறது !


சிரிக்கவில்லை என்றாலும் 

குழந்தையின் ஸ்பரிசம் 

மனதிற்குள் எப்போதும் !


தெய்வத்தின் முன்னால் 

அழுது மகிழும்போது 

குழந்தை சிரிக்காதா என்ன ?


வேகமாய் வேர்வையாய் 

நகர்ந்து கொள்ள துடித்தபோது 

கட்டி இழுத்து மழலை முத்தம் !


ஆகா , கண்ணுக்கினியன கண்டேன் !

காதுக்கு இனியன கேட்டேன் !

நெஞ்சுக்கினியது ?












Wednesday, 26 March 2014

"நாகரிகம் ! " "nAgarigam"

நாகரிகம் !


நாகரிகம்  - நாளையின் வருகையா ?
                     
                        இன்றின் இருப்பா ?

                        நேற்றின் மரணமா ?


புணர்தலிலும் புரிதலிலும் 

உணர்தலிலும் உயர்தலிலும் 


காண்பதிலும் உண்பதிலும் 

கவர்தலிலும் காதலிலும் 


ஆர்ப்பரித்தலிலும் அடக்கத்திலும் 

அன்பிலும் அகங்காரத்திலும் 


வளர்தலிலும் வஞ்சகத்தினிலும் 

வாங்கலிலும் விற்றலிலும் 


பேதமையிலும் பெருமையிலும் 

புகழ்தலிலும் பெண்மையிலும் 


நாகரிகம் எது ?

காலத்தின் ஓட்டமா ?


மாற்றம்தான் அதுவா ?

மனிதன் மாறுகிறான் , காலம் மாறுகிறது !


பல்லாங்குழி , சடுகுடு, 

குதிரை, வில், அம்பு  -

இவற்றோடு மனிதனுமா ?




Saturday, 8 March 2014

"mARinOm" "மாறினோம்"


மாறினோம் !


ஓட்டுக்கூரை கண்ணாடி வழியே

லேசான வெளிச்சம் வந்து எழுப்பியது ;


சோம்பலுடன் இன்னும் கொஞ்ச நேரம்

படுத்து எழுந்தபோது குயில் கூவியது ;


கொல்லைக்குப் போய் ,கிணற்றடியில்

பல் துலக்கியபோது மல்லிகை மணத்தது ;


வாளியில் இறைத்துத்  தலையில் ஊற்றிய நீர்

இதமான சுகம் குளிரக் கொடுத்தது ;


வாசலில் சாணி தெளித்துக் கோலம்

போட்ட மனையாளின் உதடு சிரித்துக் கனிந்தது ;


நாங்கள் வளர்த்த 'ஆ' வின் பாலில்

போட்ட காப்பி கமகமத்து நிறைந்தது ;


திண்ணையில் சற்றே சாய்ந்து உட்கார

குழந்தைகள் ஓடி வந்து மேலே விழுந்தது ;


அக்கம் பக்கமும் சொந்தமும் வந்தமர்ந்து

தன் கதை , ஊர்க்கதை பேசிக்களித்தது ;


பையன்களும் பெண்களும் சந்தோஷமாய்ப் பேசி,

சென்ற பள்ளிக்கூடம் பக்கத்தில் இருந்தது ;


நிதானமாய் அமர்ந்து சாப்பிட்ட சோறுவகை

நெஞ்சையும் நிறைத்து நிம்மதியைத் தந்தது ;


அழுத்தாத வேலையும் அளவான உழைப்பும் கூடி

தேவையான வருமானம் தடங்கலின்றி ஈந்தது ;


சாயங்காலம் குழந்தைகள் அனைத்தும் சேர்ந்து

விளையாடிய காட்சியில் மனம் கொள்ளை போனது;


வெளி மாடத்தில் விளக்கு வைத்து ஊர்ஜனம் அத்தனையும்

வீதியின் தூய காற்றை வெளியமர்ந்து ரசித்தது ;


அமைதியான இரவுப் போதில் கவலையின்றி படுத்தபோது

ஆழ்ந்த உறக்கம் வந்து ஆறுதலாய் அணைத்தது ;


விடியற்காலை திடுக்கிட்டு வியர்த்து விழித்தபோது

அற்புதமான இந்தக் கனவு நிதர்சனத்தில் கலைந்தது ;


மனைவியை அருகில் கைகளால் தேடியபோது

அடுக்களையில் விசில் சத்தம் அவளிருப்பை சொன்னது ;


அடுத்த அறையில் எப்போதிருந்தோ எரியும் விளக்கு 

மகனின் எதிர்காலக் கவலைகளை வெளிச்சம் போட்டது ;


அளவுக் குடியிருப்பின் கதவு திறந்து பார்த்தபோது

காலையின் இதம் கவனிப்பாரின்றிக் கிடந்தது ;


அலுவல் அகம் தந்த அகம் இல்லா அலுவல்களின்

தளர்வையும் மீறி ஓட நிர்பந்தம் துரத்தியது ;


வாழ்க்கையை விற்றுவிட்டு வசதி தேடும் நாகரிகம்

பலவந்தப் பிடியாய் இங்கு எல்லோரையும் இறுக்கியது .












Tuesday, 25 February 2014

"போதைவிஷம் விட்டு விடு" "BOdhai visham vittu vidu"




போதை விஷம் விட்டு விடு !



கல்லூரியில்  சேர வேண்டும்

கலைகள் பல கற்க வேண்டும் 

ஆசைப்பட்டேன் பள்ளியிலே

படித்த அந்த நாட்களிலே !


பல பரிட்சை தேறிவிட்டேன்

பள்ளியையும் தாண்டி விட்டேன்

கல்லூரியில் சேர்ந்து விட்டேன்

கவலைகளை மறந்து விட்டேன் !


படிப்பை விட தெரிந்து கொள்ள

எத்தனையோ உள்ளதையா,

அத்தனையும் தெரிந்து - கொள்ள

சில நொடியே ஆனதையா !


சில நொடியில் சில பொடிகள்

என்னுள் செய்த மாயமென்ன !

சில மணிகள் வானுலகில்

நான் சென்று இருந்ததென்ன !


பழகிவிட்டு நிறுத்தி விட்டால்

எனதுடலும் துடிப்பது ஏன் ?

பழக்கி விட்ட நண்பர்களும்

எனைப் பார்த்து சிரிப்பது ஏன் ?


விட்டுவிடு விட்டுவிடு

இப்பழக்கம் நிறுத்திவிடு,

எச்சரிக்கை மணியதுவும்

எனக்குள்ளே ஒலித்ததுவே !


முடியாது முடியாது

அது மட்டும் முடியாது

இதயத்தின் ஒரு பகுதி

ஆசை கொண்டு அலைந்ததுவே !


உன் குடும்ப நிலை எண்ணி

இவைகளை நீ நீக்கிவிடு

உனை மிஞ்ச எவருண்டு

நீக்கிவிட்டு படித்துவிடு !


இப்போது இல்லையென்றால்

எப்போது அனுபவிப்பாய் ?

அனுபவித்த பிறகே நீ

நன்றாகத்தான் படிப்பாய் !


வேண்டாமே இப்பழக்கம்

ஒழித்து விடு உயிரறுக்கும்

இதயத்தின் மறுபகுதி

என்னையே எச்சரிக்கும் !


நிச்சயமாய் முடியாது

இல்லாமல் நடவாது

எடுத்துக்கொள் எனது வெறி

தலையதையும் தாண்டிவிடும் !


தொட்டுவிட்டால் சுட்டுவிடும்

என்றே நீ எண்ணிக்கொள்

சுட்டுவிட்டால் உன் வாழ்க்கை

பட்டுவிடும் மனதில்கொள் !


முடியவில்லை, முடியவில்லை,

என்ன நானும் செய்திடுவேன் ?

இதை நானும் விட்டுவிட்டால்

உயிரையே விட்டிடுவேன் !


உயிரதுவே போனாலும்

போகட்டும் தொட்டிடாதே ,

நீ வந்ததெதற்காக

எண்ணிப்பார் மறந்திடாதே !


தாங்காது தாங்காது

இக்கொடுமை தாங்காது

இக்கொடுமைதனைத் தவிர்த்து

 சொர்க்கத்தை எட்டிவிடு !


ஆஹா நான் எட்டிவிட்டேன்

சொர்க்கமதை மிக எளிதில்

இதையா நான் இழந்துவிட

இருந்திட்டேன் மடமையினால் !


போதையது இறங்கியதும்

புத்தியதும் திரும்பியது

"தவறிவிட்டாய் மறுமுறையும் " ,

இடித்து அது கூறியது !


ஐயையோ பெருந்தவறு

அன்றோ நான் செய்திட்டேன்

என் நிலைமை நானுணர்ந்து

பெரிதாக அழுகின்றேன் !











Monday, 17 February 2014

"ஏன் படைத்தாய் ?" " En Padaithai ?"

ஏன்  படைத்தாய் ?



குயிலாய் நான் பிறந்திருந்தால்

கூவி இன்பம் கண்டிருப்பேன் !


மரமாய் நான் இருந்திருந்தால்

மகிழ்ந்து நிழல் தந்திருப்பேன் !


பூவாய் நான் பூத்திருந்தால்

புது மணமும் பெற்றிருப்பேன் !


காவிரியாய் வந்திருந்தால்

கரை புரண்டு நிறைந்திருப்பேன் !


வார்த்தையாக ஆயிடினும்

கவிதையோடு கலந்திருப்பேன் !


கற்பூரக் கட்டியானால்

ஜோதிரூபம் கொண்டிருப்பேன் !


குரங்காகிப் போயிடினும்

குறையில்லாதிருந்திருப்பேன் !


மலையாக உயர்ந்திருந்தால்

பனியோடு மகிழ்ந்திருப்பேன் !


வெண்புறாக் கூட்டத்தோடு

பறவையாகி பறந்திருப்பேன் !


நெற்கதிரின் ஓர் மணியாய்

வயல்வெளியில் சுகித்திருப்பேன் !


சலங்கை மணியானால்

சத்தமேனும் செய்திருப்பேன் !


சந்தனமாய் இறைவா ,

உன் மேலேனும் பட்டிருப்பேன் !


மனிதனென்று ஏன் படைத்தாய் , இறைவா ?

என்னை பயனில்லாதாக்கியதேன் இறைவா ?


பாவப்பிறவியிதை விட்டொழிக்க - இனி

என்றென்றும் உனை நோக்கி தவமிருப்பேன் !







          

Wednesday, 12 February 2014

"Deiva Nimisham" "தெய்வ நிமிஷம்"

தெய்வ நிமிஷம் !



எண்ணமற்று இருப்பதுதான் 

சந்தோஷம் என்றால் -

ரொம்ப சந்தோஷம் இப்போது !


நிச்சயமாகி விட்டது 

நிகழ்கால மடமைகளும் 

எதிர்கால வரவுகளும் - சந்தோஷமாய் ?


சிலருக்கு புதுசுகளே சந்தோஷம் 

புதுசுகளில் எண்ணமுண்டு -

என்பதால் எனக்கு இல்லை !


காலம் கடந்து நிற்க 

முயன்றும் - காலமே 

காலை வாரி விடுகிறது ;


காதல் என்பது இன்னும் 

சரிவரப் புரியவில்லை 

வாழ்க்கையே காதலான போதும் !


வானம் தொட்டால்தான் 

அடி மனதில் நிறைவு - மேகம் 

முகம் உரசக்  குளிர்ந்தபோதும் !


சிலர் சுலபமாய் வாழ்கிறார்கள், 

சந்தர்ப்பம் கண்டு

சந்ததி கொண்டு மேகம் தொட்டு ! 


என்னால் முடியவில்லை - இப்போதும் ,

மேகத்தால் குளிர்ந்தது போல் 

அப்பட்டமாக நடித்துக் கொண்டு ;


போதும் என்று சொன்னாலும் 

உனக்குத்  தெரியாது என்று 

பதில் சொல்லும் , என் சுற்றம் - நானும்!


வாழ்வைக் கப்பம் கட்டி 

வயது வளர்க்கிறேனோ ? 

வயதுதான் கப்பம் கேட்கிறது !


அப்பட்டமாய் வாய் திறந்து 

சிரிக்க இன்னும் கூட அச்சம் 

பொய் வேஷர்கள் திறமைசாலிகள் !


தடம் மறந்து ஓடுவார்கள் 

பிடித்து விட்டதாய் அலட்டுவார்கள் 

அங்கொருவர் இங்கொருவர் அப்படியில்லை !


சாவைக் கண்டு பயமில்லை - அட !

இவர்களும் அதைப்பற்றி 

எண்ணியே அறியாததால் !


கண் முன்னே காலன் நிற்க.. 

கட்டித் தழுவிச் செல்ல ஆசை 

கிடைக்குமா அந்த தெய்வ நிமிஷம் ?












Sunday, 9 February 2014

"Adhu" "அது"



அது !


இவைகள் ஏன் இப்படி -

          சில சமயம் புரிவதில்லை ;

இவைகள் என்பது என்னவென்று 

          எப்போதும் புரியவில்லை !


பைத்தியமாய் அலைந்து வாழ்வு 

           தேடி சிரித்துக் களித்து 

அலைவது சிலர் சுகம் !


சிந்தனையில் சோறொன்றே 

           குறியாய் எறும்பு போல 

அல்லது நாய் போலவா ?


நிம்மதி என்று சிலர் 

           நித்தமும் தெரிந்ததுபோல் 

நிதர்சனமாய், அலங்காரமாய் ;


கவலைதான் என்று சிலர் 

           கண்டது தாமே போல் 

வெளியே நிர்வாணமாய் ;


நிர்வாணம் என்பது ஆடை 

           துறத்தல் என்று 

உன்னைப்போல் மூடர்களாய் ;


உன்னைத் தெரிந்தே கூட 

           மூடனாக்கும் - என் 

அதுவைப் போன்ற கயவர்களாய் ?




Saturday, 8 February 2014

"Mazhai" "மழை"

மழை !


நினைக்கத் தெரியாத சில 

மழைக்காலங்களும் கூட !


நான் பிறந்த மறுநாளே 

பெய்து ஓய்ந்த மழை 

அம்மா சொல்லித்தான் தெரியும் !


அடுத்த சில மழைகளை 

காய்ச்சலால் உணர்த்துவேனாம் 

இதுவும் அவள் சொன்னதுதான் !


முதல் வகுப்பு சேர்ந்த அன்று 

வந்த காய்ச்சல் மழையால்தான்,

சொல்லிவிட்டு பெருமையாய் பார்ப்பாள் !


ஜன்னலோரம் அமர்ந்து கமலியும் 

நானும் மூணோன்மூணு  சொல்ல 

வரும் மழைகள் நிற்காமல் கொட்டும் !


ஏழெட்டு பேர் ஊஞ்சலில் ஆடியபோது 

திடீரென்று பிடித்தது ஒருநாள் 

காற்று ஜில்லென்று தாவியது !


குளத்தில் குதித்துத் துளைத்தபோது 

கண்மறைத்துப் பெய்த மழையிலும் 

குளத்திலும் போட்ட ஆட்டம் ! 


இந்த மழை பார் 

இன்று பெய்தது அவளோடு 

இருந்து வந்த சில மணிகளில் 


சில சமயம் கொட்டும்.. 

இந்த மழை நிற்காமல் 

மண் நனைக்காமல் மனசுக்குள் !


வருஷக்கணக்காய் பெய்யாமல் 

பொய்த்த மழை தெரியுமா ?

இங்கு குடங்கள் சொல்லும் !


மலை மேல் பெய்த மழை 

தெரியுமா, எல்லாரையும் 

ஏங்க வைக்கும் சடசட அது !


இப்போதும் பெய்கிறது 

நான் தனிமை உணரும்போது 

தோழனாய் கைகோர்க்கும் 


புத்தகம் படிக்கும்போது 

சில தடவை மண்வாசம் 

தடவித் தழுவும் எங்களை 


தெரியாமல் பெய்யும் எப்போதாவது 

கண் விழிக்க குளுமை வரும் 

அடடா ! சென்ற இரவு வேண்டும்.





Saturday, 1 February 2014

"Naal" "நாள்"

OM VENKATESAYA !


நாள் ! 

அம்மா, பால் !

கீரை வேணுமாம்மா ?

பேப்பர் வந்தாச்சா ?

நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பது ;

எவ்வளவு நேரம் குளிப்பே?

சின்னது எழுந்துடுத்தா ?

கிளம்புடா சீக்கிரம் !

டிபன் பாக்ஸ் எங்கே ?

எட்டரை போயிருக்கும் ;

அம்மா வரேன் ! அப்பா வரேன் !

சில்லரையா கொடும்மா !

ஏன் லேட்டு ?

பர்மிஷன்லாம் கிடையாது ;

அப்பாடா, என்ன கூட்டம் !

என்ன வெய்யில், ஊரா இது !

இந்தாங்கோ காப்பி ;

அந்த டிவிய போடு!

கேஸ் வந்துடுத்தா ?

பட்டுக்குட்டி , என்ன அழுகை ?

கரண்ட் போச்சா ? நாசமாப்போக ;

இன்னக்கி மோர் சாதந்தான் ;

சாப்பிட வாடா - ஹோம் வொர்க் முடுஞ்சுதா ?

அஞ்சு மணிக்கு அலாரம் வைங்கோ,

நாளைக்கு எட்டரைய புடிக்கணும் !






Friday, 24 January 2014

"Nannadu" "நன்னாடு"

OM VENKATESAYA !


நன்னாடு !

நெஞ்சழியும் கொடுமையெனில் 

என்னவென்று கேட்டீரே !


பசித்து அழும் தம் மகற்கு 

புசிக்க ஒரு அடி கொடுத்து 


ஓரம் சென்று கிழி துண்டால் 

கண்ணடக்கும் தந்தையர் !


பெற்ற வயிறு நிஜமாவே 

ரெண்டு நாளாய் எரியவே 


ஸ்பரிசத்தால் பிள்ளையின் 

வலி அடக்கும் அன்னையர் !


இளமையில் கல், 

இவர்களுக்கு வயிற்றில் !


பாரதத்தாய் பார்த்துப் பார்த்துப் 

பஞ்சடைத்துப் போய் விட்டாள் !


பாமரனின் வாயிலும் 

பண்பட்டோர் காதிலும் !


எதுவும் கேட்காததே 

நம்மவர்க்கு அடக்கம் !


செய்வதையே சொல்வார்கள் 

இவர்கள் எப்போதும் !


"ஏழைகளை உயர்த்துவோம்" ,

அங்கே யாருக்கும் பசிக்காதாம் !


என்ன கொடுமை இது 

எப்போதுதான் தீர்வது?


பாண்டித்யம் பெற்றவர்கள் 

பணம் மட்டும் பாராமல் 


பண்பட்ட பாரதத்தின் 

பதவி ஏற்க வேண்டும் !


எனக்கெதுவும் வேண்டாம் என 

சூளுரைத்த நல்லவர்கள் 


உள்ளத்தின் உள்ளிருந்து 

ஆட்சி செய்ய வேண்டும் !


எல்லோரும் செய்திடுவோம் 

இன்றே ஓர் நற்சபதம் 


ஆக்கிடுவோம் பாரதத்தை 

அகில முதல் நன்னாடாய் !







Tuesday, 21 January 2014

"Nagardhal" "நகர்தல்"

OM VENKATESAYA !

நகர்தல் !


சுவற்றில் சுண்ணாம்பு பெயர்ந்த 

இடங்களில் காந்தி , நேரு , மாரியம்மன் 

எங்கள் தெரு கூனன்  -  எல்லாரும் 

இஷ்டம்போல் இருந்தார்கள் .


ஜன்னலுக்குள் விரல் விட்டுக் கொண்டிருந்த 

மரக்கிளையில் கூத்தாடிப்பறவை ஒன்று 

விடாமல் விசிலடித்து உள்வெளியை 

நிறைத்துக் கொண்டிருந்தது !


தலைக்கு மேல் மின்விசிறி 

தர்ரீம் தர்ரீம் என்று 

ஒரு முழத்து ஒட்டடையை 

கஷ்டமாய் சுமந்தது !


நல்ல தடித்த பல்லி ஒன்று 

மிக லேசாகப் பதுங்கி - சரக் - என்று 

நாக்கு நீட்டி ஏமாந்து 

பூச்சியை கோட்டை விட்டது !


நாற்பது வயசுக்கு குறைவில்லாத 

வழுக்கைத் தலை கடிகாரம் 

நாலு மணியைப் பிடிக்க 

தட்டுத் தடுமாறி நகர்ந்து கொண்டிருந்தது !


மூணேமுக்கா காரன் செம்மண்ணில் 

கிளப்பி விட்ட புழுதியை வெல்ல முயன்று 

பக்கத்து சீட் பரசுராமன் துண்டில் 

தும்மலிட்டுத் தோற்றார் !


புது நெல்லின் மணம் வயக்காட்டிலிருந்து 

சாணத்துடன் கலந்து வந்து ... - பட்டணம் பொடி 

பலவந்தமாய் மூக்கில் புகுந்து 

நையாண்டி செய்தது !


"டீ சார் !" டேபிளில் டொப்பென்று 

வைக்கப்பட்டபோது, அந்த கிராமத்து ஆபீஸில் 

எனக்கும் ஒரு வேலை இருக்கிறதோ ?

என்று வீட்டிற்குக் கிளம்பத் தயாரானேன் !







Monday, 20 January 2014

"Mei Kaan" "மெய் காண்"

OM VENKATESAYA !

மெய் காண் !

கார்காலம் கண்டிருக்கிறீர்களா ?

காற்றும் மலையும் மண்ணும் 

நீராடை போர்த்தி மயங்கிப் புணருமே ?


கோடையில் இவையெல்லாம் 

தனித்தனியே போய்விட்டாற்போல 

ஒரு சோக மயக்கம் ? கம்பீரம் ?


சில கோடையில் உள்ளே மழை !

குளிரடிக்கக் கண்டீர்கள் !


சாலையில் போகும்போது  - எப்போதாவது 

சாலையைக் கண்டிருக்கிறீர்களா ?


அந்தச் சாலையின் சிரித்த முகம் -

கண்களைச் சுருக்கிக்கொண்டு, 

வெயில் கூசுமோ ?

பாவம் - கருத்து - போய்விட்டது !


ஒரு மகா வீரன் போல் 

நெஞ்சு நிமிர்த்திக் கிடக்கும் !


சில சமயம் பூமாலை சூட்டிக் கொள்வான்,

அந்திமக் காலத்தில் ! குளிர் விட்டது !

யாருக்கு சந்தோஷம் ?




Sunday, 19 January 2014

"Pagai Rasi" "பகை ரசி"

OM VENKATESAYA !





பகை ரசி ! 


நல்ல வேளை, இந்த உச்சி வெய்யிலை 

தனியாக நின்று தரிசிக்க எனக்கு 

தவமும் வாழ்க்கையும் கொடுத்தான் !


வெளியே நின்று வேலை நிமிர 

"சே " என்று நிழல் நாடும் அற்பம் 

எனக்கு அமையாமல் போனது!


குடை கொண்டு செல்கிறார்களே, 

குடையும் இவளும் சேர்ந்தல்லவா 

வெயிலில் இருக்கிறார்கள் ? நிழலாம் .. 


தனியாகத் தப்பித்தல் என்று கொள்ளலாமா ?

உலகில் எல்லாரும் சுயநலமிகள் 

என்று தினம் தினம் சுடப்படுகிறது.


பகைவன் பெரியவன் என்பதால் 

தான் மட்டும் பாதம் பணிந்து சிரிக்கும் 

வஞ்சகம் ! தற்சிறுமை ! பகையா, நட்பா ?


பகை ரசிக்கப் பழகியவன் பாக்கியசாலி ,

பகை அணைக்கப் பழகியவன்.. 

ஆதவனை அணைத்தவன் என்னைப்போல !



"Marathal" "மரத்தல்"

OM VENKATESAYA !


மரத்தல் 


வேஷத்திற்கு பஞ்சமேயில்லை 

முகத்திற்கு மாவு பூசாமல் ,

முகமே முகமூடியாய் !


சிரிக்கும்போது உள்ளே 

மலராமல் காய்ந்த சருகாய் !


ரொம்பத்  திறமையாய் வன்மம் காட்டாமல் 

தன் முகத்தை தரித்து சிரிக்கும் -

அனல் சுடும் நெடுநாள் கழித்து !


சாம்பல் பூத்த அடுப்பின் நெருப்பு 

அரிதார முகம் - உள்ளே ?


சிலது சிலையாகி விடும் - வேஷமா ?

மாமல்லபுரச் சிற்பத்திற்கு கூட 

உயிர் உண்டு - காரணம் -

சிற்பியா ? வேஷதாரிகளா ?


குமைந்து குமைந்து மனிதமே 

மரத்துப் போகாதோ ?


மரத்தல் என்றாலே என்ன ?

கிளை பரப்பி நிழல் கொடுத்து 

பூத்துச் சிரித்து வாசமாகி !

மரம் மரத்துப் போவதில்லையோ ?





Saturday, 18 January 2014

"Thalaipilla Thodakkam" "தலைப்பில்லா தொடக்கம்"

OM VENKATESAYA !


தலைப்பில்லா தொடக்கம் !

ஆண்டவன் கண்டிப்பாய் 

ஆண்டு கொண்டிருக்கிறான் !

என்னையும், என் உடம்பையும் , 

மனதிருந்தால், - அதனையும் .


புதுவெள்ளம் போன்று 

ஆரம்பித்திருக்கிறது !

தெளிய வேண்டும் !


இப்போதும் மேலேதான் 

வெள்ளத்தின் வேகம் !

அடியில் எப்போதும் வேகமில்லை !

வெள்ளத்திலும் கூட !


ஓடிக்கொண்டே இருக்கிறது 

நுரையும், சத்தையுமாய்,

கலங்கலும், சத்தமுமாய் !


காவியுடுத்து செல்கிறது 

புதுவெள்ளம்  - 

எவ்வளவு ஆர்ப்பாட்டம்,

போலிச்சாமியார் ?


ஆற்றுப்படுகையில் ,

உள்ளே படுகையில், 

ஓட்டமில்லை ! நிறமில்லை !

காவிக்கு வந்தனம் !